முக்கிய கேள்விகள்

1.சென்னை மெட்ரோ இரயில் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்” என்கிற சிறப்புவகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ் நாடு அரசு உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ் 03.12.2007 அன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கூட்டு முயற்சியில் (Joint Venture) செயல்படுத்திடும் வகையில், இந்நிறுவனம் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


2.சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா?
சென்னை மெட்ரோ இரயில் திட்டம், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கூட்டு முயற்சியில் (Joint Venture) செயல்படுத்தும் திட்டமாகும். தமிழ் நாடு அரசு 07.11.2007 அன்று கொள்கை அளவில் இத்திட்டத்தில் உள்ள இரண்டு வழித்தடங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு 28.01.2009 அன்று இத்திட்டத்திற்கான ஒப்புதலை அளித்தது


3.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அமைப்பு முறை என்ன?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் ஒரு தலைவரும் (Chairman) ஒரு நிர்வாக இயக்குநர் (Managing Director) மற்றும் 8 இயக்குநர்கள் உள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்பொழுது, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசால் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் எட்டு இயக்குநர்களில் நான்கு இயக்குநர்கள் மத்திய அரசாலும், நான்கு இயக்குநர்கள் தமிழக அரசாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


4. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பதிவுபெற்ற அலுவலகம் எங்கு உள்ளது?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கீழ்காணும் முகவரியில் இயங்கி வருகிறது:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்,
சி.எம்.ஆர்.எல் பணிமனை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கோயம்பேடு,
சென்னை – 600 107,
தமிழ் நாடு,
இந்தியா.
தொலைபேசி எண் :+91-44-23792000
நிகரி :+91 -44-23792200
மின்னஞ்சல் முகவரி :chennaimetrorail@gmail.com


6.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் அவசியம் என்ன?
வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வரும் சென்னை மாநகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே, இருப்புப்பாதை அடிப்படையிலான விரைவான போக்குவரத்து திட்டம் ஒன்றின் தேவையினை உணர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து உள்ளிட்ட தனியார் போக்குவரத்து, புறநகர் இரயில் சேவை மற்றும் துரித போக்குவரத்து இரயில் திட்டம் இவைகளுடன் இணைந்து, விரைவான, வசதியான, நம்பிக்கைக்கு உகந்த, செயல்திட்டமுடைய, அதிநவீன, சிக்கனத்தின் அடிப்படையிலான போக்குவரத்து திட்டம் ஒன்றினை வழங்கிடுவதே சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நோக்கமாகும்


7.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நோக்கம் என்ன?
விரைவான, வசதியான, செயல்திட்டமுடைய, அதிநவீன சிக்கனத்தின் அடிப்படையிலான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருதல். தற்போது இயங்கி வரும் பேருந்துகள், புறநகர் இரயில் மற்றும் துரித இரயில் உள்ளிட்ட பல்வகை போக்குவரத்து கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல். தொடர்ந்து பெருகிவரும் சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைத்தல். குறிப்பிட்ட நேரப்படி இயங்கும் நம்பிக்கைக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை வழங்குதல். அனைத்து பருவகாலங்களிலும் எந்த வானிலை சூழ்நிலைகளிலும் இயங்குகின்ற வகையில் ஒரு போக்குவரத்து கட்டமைப்பை சென்னை வாழ் மக்களுக்கு வழங்குதல். சாலை வழி போக்குவரத்தை பாதிக்கும் மழை, வெள்ளம், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் மனித சங்கிலி போன்றவை பற்றி கவலைப்படத் தேவையில்லை. சுற்றுப்புறச் சூழலுககு ஏற்றவகையில் போக்குவரத்துக் கட்டமைப்பை வழங்குதல்.


8.மெட்ரோ இரயில் திட்டத்தினால் நன்மைகள் என்ன?
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் ஒரு அதிநவீன, நம்பிக்கைக்கு உகந்த, பாதுகாப்பான, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத துரித போக்குவரத்து கட்டமைப்பாக கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் ஏற்படும் நன்மைகள்:

  • மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் ஒப்பிடும்போது மெட்ரோ இரயில் திட்டத்தில் கரியம் வெளியேற்றம் (Carbon emission) மிக மிக குறைவு. இதனால் காற்று மாசுபடுவது இல்லை.
  • அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
  • அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் குறைவான மின் சக்தி முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. சாலை வழி போக்குவரத்தோடு ஒப்பிடுகையில், ஒரு பயணிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல தேவைப்படும் எரிபொருள் 5-ல் ஒரு பகுதி மட்டுமே.
  • குறைவான ஒலி அளவே ஏற்படுத்தும்.
  • போக்குவரத்தை அதிகப்படுத்தும் அதே வேளையில், சாலைப் போக்குவரத்தில் உள்ள நெரிசலைக் குறைக்கும்.
  • நம்பிக்கைக்கு உகந்த, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக் கட்டமைப்பு
  • சாலைகளின் நிலைகளுக்கேற்றாற்போல் பயண நேரம் 50 முதல் 75 விழுக்காடு வரை குறைத்து தேசிய உற்பத்தி ஏற்றம் பெற வழிவகுக்கிறது
  • மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் இணைப்பு வசதி (சென்னை விமான நிலையம், சென்ட்ரல் இரயில் நிலையம், எழும்பூர் இரயில் நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும்).
  • மேலும், மெட்ரோ இரயில் செல்லும் பாதைகளின் பகுதிகளின் மதிப்பு பன்மடங்கு உயரும் என்பது அனைவரும் அறிந்ததே.

9.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் தனிச்சிறப்பு என்ன?

  • சென்னை மெட்ரோ இரயில் திட்டம் சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளான அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை மற்றும் ஜவகர்லால் நேரு சாலை ஆகிய சாலைகளில் உள்ள முக்கிய இடங்களுக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர இரயில் போக்குவரத்து, புறநகர் இரயில் போக்குவரத்து, துரித இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரப் பேருந்து, புறநகர்ப் பேருந்து மற்றும் விமான நிலையம் ஆகிய போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கின்ற வகையில் ஒரு போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்
  • சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மற்ற மெட்ரோ இரயில் திட்டங்களில் இருந்து மாறுபட்டு, திட்டத்தின் தொடக்கத்திலேயே, முதல் கட்டத்திலேயே, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், சென்னை எழும்பூர் இரயில் நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம், புனித தோமையார் மலை, அரசினர் தோட்டம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய பயணிகள் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மையங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் பயணச்சீட்டு தானியங்கி முறையில் வழங்கப்படும். பயணிகளுக்கு மின் காந்த அட்டை (Smart card) வழங்கும் திட்டமும் உள்ளது. இப்பயண அட்டையை கைப்பையில் வைத்திருந்தால் கூட, இயந்திரம் அதை அடையாளம் கண்டு இரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கும்.
  • மெட்ரோ இரயில் நிலையங்கள் அமையவிருக்கும் இடங்களில் எங்கெல்லாம் வசதியுள்ளதோ அங்கு வாகனங்கள் நிறுத்திச் செல்வதற்கு வசதியும், தொடர்ந்து பயணிக்க, பேருந்து வசதியும் ஏற்படுத்தப்படும்.
  • சாலை வாகனப் போக்குவரத்தோடு ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் மட்டுமே செலவாகும்.
  • சென்னை மெட்ரோ இரயில் திட்டம் ஒரு பசுமை திட்டமாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பில், உலக அளவில் நிகழும் தட்பவெட்ப நிலை மாறுதல்களை கண்காணிக்கும் பிரிவாக கியோட்டோ மரபு பிரிவு (Kyoto Protocol) செயல்பட்டுவருகிறது. காற்றில் கலக்கும் நச்சு வாயுக்கள், (green house gas) கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் சல்பர் ஹெக்ஸாபுலோரைடு போன்ற சுற்றுக் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களின் அளவை குறைக்கும் பணியில் கியோட்டோ பிரிவு செயல்பட்டுவருகிறது. இப்பிரிவு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, பசுமைத் திட்டங்களுக்கு உதவித் தொகை வழங்கி ஊக்குவிக்கின்றது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் ஒரு பசுமைத் திட்டம் என்பதால் இதற்கு “கரிய உதவி” (carbon credit) வழங்கவுள்ளது. இவ்வாறு பெறப்படும் “கரிய உதவி” வருவாயை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு விற்பதற்கு வழிவகை உள்ளது

10.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு என்ன? நிதி எவ்வாறு பெறப்படும்? கடன் மூலம் நிறைவேற்றப்படும் என்றால் வட்டி விவரம் என்ன?
இந்த திட்டத்திற்கான அடிப்படை உத்தேச செலவுத்தொகை ரூ.14,600 கோடி (விலைவாசி உயர்வு, மத்திய அரசின் வரிகள் மற்றும் கட்டுமான காலங்களில் ஏற்படும் வட்டி உட்பட, ஆனால் மாநில அரசின் வரிகள் மற்றும் மாநில அரசின் காலி நிலங்களுக்கான விலை நீங்கலாக) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவில் 41% -னை மாநில, மத்திய அரசுகள் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும். மீதி செலவுத் தொகை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் (Japan International Cooperation Agency – JICA) கடனாகப் பெறப்படும். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (Japan International Cooperation Agency – JICA) இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிட ஒப்புதல் அளித்து, அதற்கான ஒப்பந்தம் 21.11.2008 அன்று டோக்கியா நகரில் கையெழுத்தானது. வட்டி விகிதம்

  • ஆண்டுக்கு 0.01 விழுக்காடு – ஆலோசனைப் பணிகளுக்காக.
  • ஆண்டுக்கு 1.40 விழுக்காடு – கட்டுமானப் பணிகள் மற்றும் கொள்முதல் அதன் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள்
  • கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 30 ஆண்டுகள்.
  • 10 ஆண்டுகள் கடன் தவனை உரிமை

11.சென்னை மெட்ரோ இரயில் திட்டம் வருவாய் சார்ந்த திட்டமாக கருதப்படுமா?
ஆம். இத்திட்டம் வருவாய் ஈட்டக்கூடிய திட்டமாகும். விரிவான திட்ட அறிக்கையின்படி, 33 ஆண்டுகளில் ஏற்படும் செலவினங்கள் மற்றும் வருவாயை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிதி உள் வருவாய் விகிதம் (Financial Internal Rate of Return – FIRR) வரிகள் நிலையில் 1.40 விழுக்காடு என்றும், மத்திய அரசு வரிகளுடன் 0.86 விழுக்காடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பொருளியல் சார்ந்த உள் வருவாய் விகிதம் (Economic Internal Rate of Return – EIRR) வரிகள் இல்லாத நிலையில் 16.22 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாய் விகிதம், அடிப்படை வசதிக்கான திட்டங்களுக்கு திட்ட ஆணையம் நிர்ணயம் செய்துள்ள 12 விழுக்காட்டினை விட அதிகமாகும். எனவே, இத்திட்டத்தின் திடத்தன்மையால் ஏற்படும் பொருளாதார ஆதாயத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை.


12.இத்திட்டத்தினை லாபகரமாக இயக்கப்படுவதற்கு பயணக்கட்டண விகிதம் எவ்வாறு இருக்கும்?
பயணக்கட்டண விகிதம், மெட்ரோ இரயில் இயக்கப்படும்போது நிர்ணயம் செய்யப்படும். எனினும் இத்திட்டத்தினை லாபகரமாக இயக்குவதற்கு ரூ 8 முதல் ரூ 23 வரை பயண தூரத்துக்கு ஏற்றாற்போல் நிர்ணயம் செய்யவேண்டும். பயணக் கட்டணம் கட்டுமானப் பணிகள் முடிவு பெறும் காலங்களில் 2013-2015-ல் முடிவு செய்யப்படும்


13.பயணக்கட்டணங்கள் தவிர வேறு எந்த வகையில் வருவாய் ஈட்டப்படும்?
மெட்ரோ இரயில் இயக்கப்படும்போது பயணக்கட்டணங்களில் 10 விழுக்காடு அளவு வருவாய் மற்ற வழிகளில் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் நிலையங்களின் இடங்கள் வணிக அமைப்புகளுக்கு வாடகைக்கு விடுவதோடு, வாகனம் நிறுத்தும் நிலையங்களுக்கான குத்தகை மூலமாகவும், இரயில் பயணச்சீட்டு, இரயில் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் விளம்பரங்கள் செய்வதன் மூலமாகவும்; மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் திரைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதன் மூலமாகவும் வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளன. வாடகை விடும் இடங்கள் – உடைமைகள் அபிவிருத்தி கூட்டு முயற்சியில் செய்யப்படும். சில இடங்களில் முழுவதுமாக வாங்கப்படும். நில விலையோடு சேர்ந்து அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ 1,136 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15 ஆண்டிலிருந்து இதன் மூலம் ரூ 276 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


14. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் விரிவான திட்ட அறிக்கையில், 2016 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 7.74 இலட்சம் என்றும் 2026 ஆம் ஆண்டில் 12.85 இலட்சம் நபர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு சாதிக்க முடியும்?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒரு விரிவான ஆய்வுக்குப்பின்னரே இத்தகவலை குறிப்பிட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகளிலேயே முக்கியமான இடங்கள், அதாவது பயணிகள் அதிக அளவில் கூடும் இடங்களை இணைக்கின்றது. மேலும் விரிவான திட்ட அறிக்கையில், அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் இணைப்புப் பேருந்துகள் இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், எதிர்பாக்கின்ற அளவில் பயணிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது.


15.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் கட்டப்படும் வழித்தடங்கள் என்ன?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 45 கி.மீ தொலைவு உள்ள இரண்டு வழித்தடங்கள் கட்டப்படும். இதில் 24 கி.மீ தொலைவு தரைக்கு அடியில் சுரங்கப்பாதையாகவும், 21 கி.மீ தொலைவு தரைக்கு மேல் உயர்த்தப்பட்ட இரயில் பாதையாகவும் இருக்கும். முதல் வழித்தடத்தின் தொலைவு 23.1 கி.மீ ஆகும். இவ்வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் தொடங்கி அண்ணா சாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை இருக்கும். இவ்வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ தரைக்கு அடியில் சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள 8.8 கி.மீ தொலைவு தரைக்குமேல் உயர்த்தப்பட்ட இரயில் பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தின் தொலைவு 22 கி.மீ ஆகும். இவ்வழித்தடம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தொடங்கி ஈ.வெ.ரா. பெரியார் சாலை, கோயம்பேடு வழியாக புனித தோமையார் மலை வரை இருக்கும். இவ்வழித்தடத்தில், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து திருமங்கலம் வரை 9.7 கி.மீ தரைக்கு அடியில் சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள 12.3 கி.மீ தொலைவு தரைக்குமேல் உயர்த்தப்பட்ட இரயில் பாதையாகவும் இருக்கும்.


16.முதல் கட்டத்தில் இந்த இரண்டு வழித்தடங்களும் எதற்காக தேர்வு செய்யப்பட்டன?
சென்னை மாநகரில் அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக் கட்டமைப்புக் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்த இரண்டு வழித்தடங்களும் முன்மொழியப்பட்டன. தமிழக அரசு, இதனை விரிவான பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் அளித்தது. சென்னை மாநகரில் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ள அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, மற்றும் ஜவகர்லால் நேரு சாலை (நூறடி சாலை) ஆகிய மூன்று முக்கிய சாலைகள் இந்த இரண்டு வழித்தடங்களில் உள்ளடங்கும். இதனால் இந்த மூன்று சாலைகளின் வாகனம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மெட்ரோ இரயில் இயக்குவதன் மூலம் சாலைகளில் உள்ள 16 பேருந்துகள் அல்லது 300 கார்கள் அல்லது 600 இரு சக்கர வாகனங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாலைகளில் பெருகிவரும் வாகனபோக்குவரத்து நெரிசல் கனிசமானஅளவு குறையும்


17.சென்னை மெட்ரோ இரயில் சேவை மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படுமா? இது எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
பல்வேறு போக்குவரத்துக் கட்டமைப்புகளை இணைத்து ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைத்து மக்களுக்குத் தறமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தருவதுதான் அடிப்படை செயல்முறை கொள்கையாகும். மற்ற மெட்ரோ இரயில் திட்டங்களோடு ஒப்பிடுகையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் முதல் கட்டப்பணிகளிலேயே, பயணிகள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், சென்னை எழும்பூர் இரயில் நிலையம், கோயம்பேடு மத்திய புறநகர் பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம், புனித தோமையார் மலை, கிண்டி, அரசினர் தோட்டம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களை இணைக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, மற்றும் ஜவகர்லால் நேரு சாலை ஆகியவற்றில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கின்ற வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளை கீழ்கண்டவாறு ஒருங்கிணைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. (அ) தொலைதூர இரயில்களை இணைக்கும் இடங்கள்: சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், சென்னை எழும்பூர் இரயில் நிலையம், புனித தோமையார் மலை இரயில் நிலையம் மற்றும் கிண்டி இரயில் நிலையம் ஆகிய இரயில் நிலையங்கள். (ஆ) புறநகர் இரயில்களை இணைக்கும் இடங்கள்: கோட்டை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் புனித தோமையார் மலை மற்றும் கிண்டி இரயில் நிலையங்கள். (இ) துரிதபோக்குவரத்து இரயில்களை இணைக்கும் இடங்கள்: சென்னை சென்ட்ரல் மற்றும் புனித தோமையார் மலை இரயில் நிலையங்கள். (ஈ) தொலைதூரம் வெளியூர் செல்லும் பேருந்துகளுடன் மெட்ரோ இரயில் இணைக்கப்படும் இடங்கள்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், அசோக் நகர் மற்றும் ஆலந்தூர். (உ) சென்னை மாநகரப் பேருந்துகளுடன் இணைக்கப்படும் இடங்கள்: உயர்நீதிமன்றம் (பாரி முனை) மற்றும் மூன்று முக்கிய பிரதான சாலைகளான, அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, மற்றும் ஜவகர்லால் நேரு சாலை வழிகளில். (ஊ) சென்னை விமானப் பயணிகளுக்காக சென்னை விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம். (எ) மெட்ரோ இரயில் நிலையங்களில் இட வசதிக்கு ஏற்றவாறு இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவாற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளோடு ஒருங்கிணைப்பதற்கு கீழ்கண்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. (1) மற்ற போக்குவரத்துக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து பயணம் செய்வதற்கு ஏதுவாக, ஒரே பயணச்சிட்டு வழங்கும் முறை. (2) இடவசதி உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் இரு அல்லது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு தொடர்ந்து மெட்ரோ இரயிலில் பயணம் செய்வதற்கு வாகன நிறுத்தங்கள் வசதி. (3) மெட்ரோ இரயில் நிலையங்கள் அருகில் ‘பல அடுக்கு’ வாகன நிறுத்தங்கள் (4) மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ இரயிலில் இருந்து மற்ற இரயிலுக்கு செல்வதற்கு இட மற்றும் தொழில்நுட்ப வசதிக்கேற்ப நகரும் படிக்கட்டுகள் அல்லது நகரும் நடை மேடைகள் அமைக்கப்படும். (5) மெட்ரோ இரயில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடங்களில் இணைப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். (6) மெட்ரோ இரயில் நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியில் செல்லும் வழிகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலை சந்திப்புகளின் அருகில் ஏற்படுத்தப்படும்


18.மெட்ரோ இரயிலின் வழித்தடங்கள் சுரங்கப்பாதையாக இருக்குமா அல்லது உயர்த்தப்பட்ட பாதையாக இருக்குமா? சுரங்கப்பாதை என்றால் எந்தெந்த பகுதிகள் சுரங்கப் பாதைகளாக இருக்கும்?
முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்பட உள்ளன.


19.எத்தனை மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டப்படும்? அவை எந்தெந்த இடத்தில் இருக்கும்?
முதல் வழித்தடத்தில் 17 மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. அவை: வண்ணாரப்பேட்டை மெட்ரோ, மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல் மெட்ரோ, அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜி-டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை மெட்ரோ ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் தரைக்கு அடியிலும், சின்ன மலை, கிண்டி மெட்ரோ, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் மெட்ரோ மற்றும் விமான நிலையம் ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்கள் தரைக்கு மேல் உயர்த்தப்பட்ட இரயில் நிலையங்களாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில், 17 மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையமும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமும் இரண்டு வழித்தடங்களிலும் இடம்பெறும். இரண்டாவது வழித்தடத்தில் இடம்பெறவுள்ள மெட்ரோ இரயில் நிலையங்கள்: சென்ட்ரல் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, செனாய்நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம் ஆகிய 9 மெட்ரோ இரயில் நிலையங்கள் தரைக்கு அடியிலும், கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காடு தங்கல், ஆலந்தூர், பரங்கிமலை மெட்ரோ ஆகிய 8 மெட்ரோ இரயில் நிலையங்கள் தரைக்கு மேல் உயர்த்தப்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்களாக இருக்கும்.


சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு இருப்புப்பாதை வகையில் வரையளவு இருப்புப்பாதை (56½ அங்குலம் இடைவெளி) (1435mm – Standard Gauge) இரயில் பாதை ஏன் பயன்படுத்தப்படுகிறது?
அ) வரையளவு இருப்புப் பாதையில் திடீர் வளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும், வழித்தடம் அமையும் இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் குறைவாக இருக்கும். ஆ) வரையளவு இருப்புப் பாதை தேர்வு செய்வதால் இரயில் வண்டி வைப்பிடம் (depot) கட்டுவதற்காக தேவைப்படும் இடம் குறையும். எனவே இட நெருக்கடி உள்ள நகர்ப்புறங்களில் வரையளவு இருப்புப் பாதை அமைப்பதே ஏற்புடையதாகவும், பொருத்தமாகவும் இருக்கும். இ) உலக அளவில் மெட்ரோ இரயில்கள் வரையளவு இருப்புப்பாதையில் இயக்கப்படுவதால், அதன் மீது இயக்கப்படும் இரயில் பெட்டிகளுக்கான தொழில்நுட்பம் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் உள்ளன. வரையளவு இருப்புப் பாதையைவிட அகலமான இருப்புப் பாதையில் இயக்கப்படும் இரயில் பெட்டிகளுக்கான தொழில்நுட்பம் எளிதாக வாங்கும் அளவுக்கு இல்லை. இதற்கென தனியாக தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் அதிக காலமும், செலவும் ஏற்படும். (ஈ) அதிக நாடுகளில் மெட்ரோ இரயில்கள் டெல்லி மற்றும் பெங்களுரு உட்பட வரையளவு இருப்புபாதையில் இயக்கப்படுவதால், அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது. எனவே தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ இரயிலை நவீனப்படுத்த முடியும். அகல வழிப் பாதையில் இது சாத்தியமில்லை. (உ) சென்னை சாலைகள் அகலம் குறைவாகவும் திடீர் திருப்பங்களும் நிறைந்தவை. எனவே, வரையளவு இருப்புப் பாதையை தேர்வு செய்வதால், குறைந்த இடத்தில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும். (ஊ) எடை குறைவாக உள்ளதால் இரயிலை இயக்குவதற்குத் தேவைப்படும் மின்சக்தி குறையும். (எ) வரையளவு இருப்புப் பாதை என்பதால் சுரங்கத்தின் சுற்றளவும் சிறிதாக இருக்கும். எனவே சுரங்கம் கட்டுவதற்கான செலவும் குறையும். (ஏ) மெட்ரோ இரயில் தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான இரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டால், இரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். (ஐ) மெட்ரோ இரயில்கள் வரையளவு இருப்புப்பாதையில் இயக்காமல், அகல இரயில் பாதையில் இயக்குவதுபோல் வடிவமைக்கப்பட்டால், மற்ற இரயில்களையும் மெட்ரோ இரயில் வழித்தடங்களில் இயக்கலாமே என்ற கருத்து நிலவுகிறது. இது தொழில்நுட்ப காரணங்களால் சாத்தியமில்லை. மெட்ரோ இரயில் இயக்குவதற்கும் மற்ற இரயில்களுக்கும் கீழ்க்காணும் வேறுபாடுகள் உள்ளன. இரயில் பெட்டிகளின் மாறுபட்ட தொழில்நுட்பம் மாறுபட்ட அறிவிப்பு சைகை (Signal) முறை இரயில்கள் இயக்கப்படும் இடைவெளி நேரம் மாறுபடும் பயணக் கட்டணம் நகரும் கோணங்கள் மாறுபடும் வரையறுக்கப்பட்ட எடைகள் (ஓ) மெட்ரோ இரயிலுக்கு தேர்ந்தெடுக்கும் இருப்புப்பாதை அளவை நிர்ணயம் செய்வது தொழில்நுட்பமும் சிக்கனத்தின் அடிப்படையிலாகும். இந்த அடிப்படையில் வரையளவு இருப்புப் பாதையே (Standard gauge) மேலானது. எனவேதான் பெருவாரியான நாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் வரையளவு இருப்புப்பாதையில் இயக்கப்படுகின்றன


21.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் உள்ள இரண்டு வழித்தடங்களையும் தேர்வு செய்வதற்குமுன், வழித்தடங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?
வழித்தடங்களை தேர்வு செய்வதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. ஆனால், இந்த வழித்தடங்களினால் பாதிக்கப்படும் மக்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு வழித்தடங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.


1.மெட்ரோ இரயில் திட்டத்திற்கும் துரித பேருந்து போக்குவரத்துக் கட்டமைப்பிற்கும் என்ன வேறுபாடு?
மெட்ரோ இரயில் திட்டம் ஏற்ற இறக்கங்களுடன் இருப்புப்பாதையில் செல்லக்கூடிய, நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்படும் திட்டமாகும். துரித பேருந்து போக்குவரத்து என்பது, சாலைகளில் தனியாக ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அதில் பேருந்து அதி வேகத்தில் தொடர்ந்து இயக்கப்படும் திட்டமாகும். மெட்ரோ இரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்யலாம். மெட்ரோ இரயிலில் ஒரு மணி நேரத்தில், ஒரு திசையில் 30,000க்கும் அதிகமான நபர்கள் பயணம் செய்யலாம். அதே நேரத்தில் துரித பேருந்து போக்குவரத்தில் 10,000க்கும் குறைவான நபர்களே பயணம் செய்ய முடியும். மெட்ரோ இரயிலில் மாசுத்தன்மை குறைவு, பாதுகாப்பு அதிகம். அனைத்துவகைப் பயணிகளுக்கும் ஏற்றவாறு இருக்கும். இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ இரயிலில் பபணம் செய்வதற்கு ஏதுவான வசதிகள். மெட்ரோ இரயிலில் இருந்து மற்றவகை இரயிலில் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு இரயில் நிலையங்கள். துரித பேருந்து போக்குவரத்தில் மற்ற சாலைவழி போக்குவரத்து இடையூறுகளினால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. துரித பேருந்து போக்குவரத்தில் உள்ள பயன்கள்: செலவீனம் குறைவு, எளிமை, எளிதாக இயக்கலாம். சென்னை மாநகரில் உள்ள சாலைகள் குறுகலானவை. சென்னையில் முக்கிய சாலைகளில், உச்சக்கட்ட போக்குவரத்து நேரங்களில், ஒரு மணிக்கு சுமார் 30,000 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்துக் கட்டமைப்புத் தேவைப்படுகிறது. மெட்ரோ இரயில் போக்குவரத்துக் கட்டமைப்பு இத்தேவையை பூர்த்தி செய்யும்.


2.சென்னை மெட்ரோ இரயில் திட்டம் சென்னையில் உள்ள துரித இரயில் போக்குவரத்துத் திட்டத்துடன் எந்த வகையில் மாறுபடுகிறது?
சென்னையில் இயக்கப்படும் துரித இரயில் போக்குவரத்து (MRTS) இந்திய இரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயிலை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. மெட்ரோ இரயிலின் வழித்தடங்கள் சென்னையின் முக்கிய சாலைகளின் வழியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துரித இரயில் போக்குவரத்தின் வழித்தடங்கள் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாக செல்லும் வகையில் உள்ளது. மெட்ரோ இரயில் வழித்தடங்கள் முக்கிய சாலைகளின் ஓரங்களில் இருப்பதால் பொதுமக்கள் எளிதாக மெட்ரோ இரயிலில் பயணிக்க முடியும். மெட்ரோ இரயில் நிலையங்கள் வயோதிகர்களும், ஊனமுற்றவர்களும் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில் கட்டப்படும். அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் குறைந்தது ஒரு இயங்கும் படிக்கட்டும் ஒரு மின் தூக்கியும் இருக்கும். துரித இரயில் போக்குவரத்து திட்டத்தில் கட்டுமானப்பணி, வழித்தடங்களில் அங்கேயே கட்டப்படுகிறது. மெட்ரோ இரயில் திட்டத்தில், இருப்புப் பாதைகள் தனியாக வார்ப்புக் கூடத்தில் கட்டப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொருத்தப்படும். துரித இரயில் வரையளவு இருப்புப் பாதையை விட அகலமான இருப்புப் பாதையில் இயக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ இரயில் வரையளவு இருப்புப்பாதையில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. துரித இரயிலின் வழித்தடங்கள் தரையிலும், உயர்த்தப்பட்ட பகுதியாகவும் உள்ளன. மெட்ரோ இரயில் வழித்தடங்கள் தரைக்கு அடியில் சுரங்கப்பாதையாகவும். உயர்த்தப்பட்ட பகுதியாவும் கட்டப்படும். துரித இரயில் போக்குவரத்தில் இரயிலின் ஓட்டம் இருப்புப் பாதைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள விளக்கு அறிவிப்பு சைகை மூலம் இருக்கும். மெட்ரோ இரயில் போக்குவரத்தில் இரயில் ஒட்டுநர் அறையின் உள்ளேயே (cabin signal) அறிவிப்பு சைகை இருக்கும். துரித இரயில் போக்குவரத்துத் திட்டத்தில் இரயில்கள் 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்களுக்குள் ஒரு இரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படும். மெட்ரோ இரயில்கள் 3-5 நிமிடத்திற்கு ஒரு இரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படும். மெட்ரோ இரயில்களும் தரைக்கடியில் கட்டப்படும் மெட்ரோ இரயில் நிலையங்களும் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும். துரித இரயில்களிலும் துரித இரயில் நிலையங்களிலும் குளிரூட்டுவசதி கிடையாது. துரித இரயில் பெட்டிகளில் உட்கார்ந்து பயணம் செய்வதற்கு ஏதுவாக அதிக அளவில் இருக்கைகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் பெட்டிகளில் அதிக அளவில் நின்றுகொண்டு பயணம் செய்யும் வகையில், இருக்கைகள் குறைவாக வடிவமைக்கப்படும். மெட்ரோ இரயிலில் தானியங்கி கதவுகள் இருக்கும். துரித இரயிலில் தானியங்கி கதவுகள் கிடையாது. மெட்ரோ இரயிலில், அடுத்து வரப்போகும் மெட்ரோ இரயில் நிலையம் குறித்த விவரம் தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு கருவி நிறுவப்படும். துரித இரயிலில் தற்போது இது கிடையாது


3.டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தோடு ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன?
டெல்லியில் உள்ள சாலைகளும் நடைபாதைகளும் அகலமாக உள்ளதால், மெட்ரோ இரயில் நிலையங்களுக்காக நிறுவப்படும் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் ஆகியவை, நடைபாதைகளில் எளிதாக கட்டப்படுகின்றன. டெல்லி மாநகரோடு ஒப்பிடுகையில், சென்னையில் உள்ள சாலைகளும் நடைபாதைகளும் குறுகலானவை. மெட்ரோ இரயில் கட்டப்படவுள்ள இடங்களில் சாலையோரப் பகுதிகளுக்கும் சாலையின் ஓரத்தில் உள்ள கட்டிடங்களுக்கும், உள்ள இடைவெளி மிகவும் குறுகலாக உள்ளன. எனவே சென்னையில், கட்டுமானப்பணிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே மேற்கொள்ள வேண்டியுள்ளது


4.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தையும், டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தையும் ஒப்பிட முடியுமா?
டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தில், மெட்ரோ இரயில்கள் வரையளவு இருப்புப் பாதையிலும் (Standard Gauge), அகலமான இருப்புப் பாதையிலும் (Broad Gauge) இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மெட்ரோ இரயில்கள் வரையளவு இருப்புப் பாதையில் (Standard Gauge) மட்டுமே இயக்கப்படும். டெல்லியில் சாலைகளும், சாலையோர நடைபாதைகளும் அகலமாக உள்ளன. சென்னையில் சாலைகளும், சாலையோர நடைபாதைகளும் குறுகலானவை, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெறும் போது மிகுந்த போக்குவரத்து சிரமங்களுக்கிடையே மேற்கொள்ளவேண்டியிருக்கும். டெல்லி மற்றும் சென்னை மெட்ரோ இரயில் ஆகிய இரண்டு திட்டங்களுக்கா‌க டி. எம். ஆர். சி விரிவா‌ன திட்ட அறிக்கையை தயா‌ரித்து வழ‌ங்கியுள்ளது‌. டெல்லி மெட்ரோ இரயில் கழகம், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு இடைக்கால ஆலோசகர்களாக இருந்தனர். தற்பொழுது அவர்கள் முதன்மை ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தில் கட்டுமானக் காலங்களிலும், செயல்படுத்தல் மற்றும் பராமரிப்புக் காலங்களில் எதிர்கொண்ட தொழில்நுட்பக் கோளாறுகள், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் ஏற்படாத வகையில், டெல்லி மெட்ரோ இரயில் கழகத்தின் ஆலோசனைகளின் அடிப்படிடையில், தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ இரயில் திட்டம், டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தைவிட சிறப்பாக அமையும்



1.சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா?
ஆம். சென்னை மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரை 4.5 கி.மீ நீளம் உள்ள உயர்த்தப்பட்ட வழித்தடம் கட்டுவதற்கான பணி ஒப்பந்தம், ஹைதராபாத்தைச் சேர்ந்த திருவாளர்கள் சோமா எண்டர்பிரைஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ. 199.20 கோடி மதிப்பிட்டில் வழங்கப்பட்டு, 10.06.2009 முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ஓப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்ட பணிகள் என்ற தலைப்பில் வலைபக்கத்தில் காணலாம்


2.மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் எப்பொழுது நிறைவு பெறும்?
மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் 2015-2016 நிதியாண்டில் முடிவுறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


3.மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் 2015-2016 முடிவுறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தால், இரண்டாம் கட்டப் பணிகள் எப்பொழுது தொடங்கப்படும்?
மெட்ரோ இரயில் திட்டத்தினை விரிவுபடுத்துதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து அரசு முடிவு எடுக்கும்.


4.சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?
திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒப்பந்தப்புள்ளி கோரும் விவரங்கள் முக்கிய நாளிதழ்களில் விளம்பரப்படுத்துவதோடு, www.chennaimetrorail.gov.in மற்றும் www.tenders.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளிலும் வெளியிடப்படுகின்றன.


5.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான ஆலோசகர்கள் யார்?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகளுக்கான “பொது ஆலோசகர்கள்” (General Consultants) 24.02.2009 அன்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐந்து நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈஜிஸ் இரயில் (Egis Rail, France) என்ற நிறுவனத்தின் தலைமையில் மெட்ரோ இரயில் திட்டத்திற்கான பொது ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பின் பிற உறுப்பினர்கள் (அ) ஈஜிஸ் இந்தியா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியா (Egis India Consulting Engineers Private Ltd, India) (ஆ) மான்செல் கன்சல்டன்ட்ஸ் ஏசியா லிமிடெட், ஹாங் காங் (Maunsell Consultants Asia Ltd, Hong Kong), (இ) பாலாஜி இரயில் ரோடு சிஸ்டம்ஸ் லிமிடெட், இந்தியா (Balaji Rail Road Systems Ltd, India) மற்றும் (ஈ) யாச்சியோ இன்ஜினியரிங் கோ லிமிடெட், ஜப்பான் (Yachio Engineering Co Ltd, Japan). சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான வடிவமைப்பு (Design), மேற்பார்வை (Supervision), தரக்கட்டுப்பாடு (Quality Control), பாதுகாப்பு (Safety) மற்றும் ஒப்பந்தக் கட்டுப்பாடு மேலாண்மை (Contract Management) ஆகியவற்றில் பொது ஆலோசகர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு உரிய ஆலோசனைகள் வழங்கி உதவுவார்கள். மேலும், மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கான “முதன்மை ஆலோசகராக” (Prime Consultant) டெல்லி மெட்ரோ இரயில் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. முதன்மை ஆலோசகர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்வார்கள்


6.ஒப்பந்தக்காரர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர் யார்?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈஜிஸ் இரயில் (Egis Rail, France) என்ற நிறுவனத்தின் தலைமையில் ஐந்து நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் “பொது ஆலோசகர்களாக” உள்ளனர். அவர்கள் ஒப்பந்தக்காரர்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு உதவுவார்கள்.


7.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில், டெல்லி மெட்ரோ இரயில் கழகத்தின் பங்கு என்ன?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையினை (Detailed Project Report) டெல்லி மெட்ரோ இரயில் கழகம் தயாரித்துக் கொடுத்துள்ளது. டெல்லி மெட்ரோ இரயில் திட்டத்தை வடிவமைத்து சிறப்பாக செயல்படுத்துவதால் இப்பணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பொது ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதற்குமுன், இத்திட்டத்திற்கு, டெல்லி மெட்ரோ இரயில் கழகம் “இடைக்கால ஆலோசகர்களாக” (Interim Consultants) நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது டெல்லி மெட்ரோ இரயில் கழகம், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு முதன்மை ஆலோசகர்களாக (Prime Consultant) நியமிக்கப்பட்டுள்ளனர். முதன்மை ஆலோசகர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு, மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்வார்கள். 21.1.2009 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில், “இந்தத் திட்டத்தில் திருவொற்றியூரும் இணைக்கப்பட வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இதற்கான விரிவான ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படும்.” என்று அறிவித்திருந்தார். இது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டெல்லி மெட்ரோ இரயில் கழகத்துக்கு வழங்கியுள்ளது. விரிவான திட்ட அறிக்கையின் வரைவு 29.6.2010 அன்று அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளது.


8.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில், சுரங்க இரயில் பாதையும் உயர்த்தப்பட்ட வழித்தடங்களும் எவ்வாறு கட்டப்படும்?
சுரங்க இரயில் பாதை கட்டுவதற்கு நவீன சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்படும். (Tunnel Boring Machine). உயர்த்தப்பட்ட வழித்தடங்களைக் கட்டுவதற்கு, இருப்புப் பாதைகளின் பாகங்கள் தனியாக வார்ப்புக் கூடங்களில் கட்டப்பட்டு, வழித்தடம் அமையவுள்ள இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்படும். கொல்கத்தாவில் 1970-ல் மெட்ரோ இரயில் திட்ட கட்டுமானப் பணிகளுக்காக, பெரிய பாதாளக்குழிகள் தோண்டப்பட்டு, சுரங்க இரயில் பாதைகள் கட்டியபின் மூடப்பட்டது


9.மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் எந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக, உலகத் தரம்வாய்ந்த தடுப்பு அரண் அமைக்கப்படும். சாலையில் செல்லும் வாகனம் மோதினால் கூட அதனை தாங்கும் அளவுக்கு இருக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குகின்றபோதே உலகத்தரம்வாய்ந்த வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்தான் பணிகள்மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றை ஒப்பந்தக்காரர்கள் கடைபிடிக்கின்றனரா என்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு, உறுதி செய்யப்படும்.


10.சென்னை மாநகர் கடற்கரைக்கு அருகில் இருப்பதால், தரைக்கடியில் இரயில் சுரங்கப்பாதை கட்டும்பொழுது தண்ணீர்கசிவு ஏற்படுமா?
நவீன இயந்திரத்தைக் கொண்டு, கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் போதும், கடற்கரை ஓரம் சுரங்கம் தோண்டும் போதும் ஏற்படுகின்ற நீர்க்கசிவை கையாளுவதற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளது வெளியிடப்படுகின்றன.


11.சுரங்கப்பாதை அமைக்கும் கட்டுமானப்பணிகள் எப்பொழுது தொடங்கப்படும்?
சுரங்கம் அமைக்கும் பணிகளை 2012 ஆம் ஆண்டின் மூன்றம் கால் ஆண்டில் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


12.ஒரு கி.மீ. உயர்த்தப்பட்ட வழி இரயில் பாதை அமைப்பதற்கும், ஒரு கி.மீ. தூரம் சுரங்க வழி இரயில் பாதை அமைப்பதற்கும் எவ்வளவு செலவாகும்? தரைக்கு அடியில் சுரங்க மெட்ரோ இரயில் நிலையம் ஒன்று அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும்?
ஒரு கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட இரயில் பாதை கட்டுவதற்கு ரூ 100 கோடி செலவாகும் என்றும், ஒரு கி.மீ. தூரம் சுரங்க இரயில் பாதை கட்டுவதற்கு ரூ 300 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சுரங்க மெட்ரோ இரயில் நிலையம் கட்டுவதற்கு ரூ 100 கோடி செலவாகும் என்றும், உயர்த்தப்பட்ட மெட்ரோ இரயில் நிலையம் கட்டுவதற்கு ரூ 30 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


13.தரைக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்? சுரங்கத்தின் சுற்றளவு எவ்வளவு?
தரைக்கு அடியில் 9 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் கட்டப்படும். தரை மட்டத்திலிருந்து சுரங்க இருப்புப் பாதை மட்டத்தின் ஆழம் 15 மீட்டரிலிருந்து 17 மீட்டர் வரை இருக்கும். சுரங்கத்தின் வெளிச் சுற்றளவு 6.2 மீட்டர் ஆகவும் சுரங்கத்தின் உள் சுற்றளவு 5.8 மீட்டர் ஆகவும் கட்டப்படும்.


14.தரைக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பொழுது தரைக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பாதிப்பு ஏற்படாது. சுரங்கம் தோண்டுவதற்கு அதி நவீன சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்படும். தரைக்குமேல் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


15.மழைக்காலங்கள்/வெள்ள நேரங்களில் சுரங்கப்பணிகள் நடைபெறும் போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு திட்ட அடிப்படையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் மழைக்காலங்கள்/வெள்ள நேரங்களில் மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொது ஆலோசகர்களின் கண்காணிப்பில் ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை ஏற்பாடுகளோடு பணிகளை மேற்கொள்வர்.


16.சுரங்க மெட்ரோ இரயில் நிலையங்கள் எவ்வாறு கட்டப்படும்?
சுரங்க மெட்ரோ இரயில் நிலையம் கட்டும் பணி பகுதி, பகுதியாக மேற்கொள்ளப்படும். முதலாவதாக பாதி சாலையில் போக்குவரத்து மூடப்பட்டு ஒரு பகுதியில் குழித்தோண்டப்படும், பின்னர் மண் சரியாமல் இருக்க கான்கிரிட் சுவர்கள் அமைக்கப்படும்.இந்த சுவர்களை பயன்படுத்தி அதன் தற்காலிக தளம் அமைக்கப்படும். இதன் மீது போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் பின்னர் சாலையின் அடுத்த பகுதியில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும். தோண்டும் பணிகள், தற்காலிக தளத்தின் கீழ் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். சாலையை பயன்படுத்துவோர் பாதுகாப்பை கருதி பணி நடைபெறும் இடங்களில், உலகத்தரம் வாய்ந்த தடுப்பு அரண் அமைக்கப்படும்.


17.சென்னை மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில், மின்சாரம், குடிநீர், கழிவு நீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் தடைபடுமா?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, மெட்ரோ இரயில் வழித்தடங்களில் உள்ள மின்சார கம்பிகள், தெரு விளக்குகள், தொலைபேசி கேபில்கள், குடிநீர் குழாய்கள், கழிவு நீர் இணைப்புகள் போன்றவை மாற்றுப் பாதையில் திருப்பிவிட மெட்ரோ இரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பணிகள் கட்டுமானப்பணி தொடங்கும் முன் முடிக்கப்படும். எனவே இந்த சேவைகளுக்கு எந்த தடங்களும் ஏற்படாது.


18.சென்னை மாநகரில் தரைக்கு அடியில், மின்சாரக் கம்பிகள், தொலைபேசி கம்பிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ இரயில் பாதைக்காக சுரங்கம் தோண்டும்பொழுது இவை பாதிக்கப்படாதா? சுரங்கம் எவ்வளவு ஆழத்தில் தோண்டப்படும்?
சுரங்கம் தரைக்கு அடியில் 9 மீட்டர் ஆழத்தில் தோண்டப்படுவதால், இவைகள் பாதிக்கப்படாது.

1.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது?
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை உருவாக்கி முறைப்படுத்துகின்ற காலத்திலேயே, இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முடிந்தவரை அரசு நிலங்கள் மற்றும் பொது நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களால், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் குறைந்த அளவில் தனியார் இடங்கள் கையகப்படுத்தப்படும். முடிந்தவரை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமய நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலங்களை தவிர்க்கலாம் என்றும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் குறைந்த அளவு நிலம் மட்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு தேவைப்படும் மொத்த நிலங்களில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு (15.08.2010 தேதியில்) மொத்தம் 75.16 எக்டேர் (185 ஏக்கர்) நிலம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 57.68 எக்டேர் (142.52 ஏக்கர்) நிலம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடம், 6.86 எக்டேர் (16.95 ஏக்கர்) நிலம் மத்திய அரசுக்கு சொந்தமான இடம், மற்றும் 10.61 எக்டேர் (26.21 ஏக்கர்) நிலம் தனியாரிடமிருந்து பெறப்படவேண்டிய நிலங்கள்.


2.தனியார் நிலங்கள் எவ்வாறு கையகப்படுத்தப்படும்? தனியார் நிலங்கள் கையகப்படுத்துதல் தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கொள்கை என்ன?
நிலம் கையகப்படுத்துதலுக்கான கொள்கை: * தனிநபர்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்துதலைக் குறைப்பதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. * மெட்ரோ இரயில் நிலையங்களும் அது தொடர்பான அமைப்புகளும் முடிந்தவரை அரசு நிலங்களில் நிறுவப்படும். * தனியார் நிலங்கள் கையகப்படுத்துதலை மேலும் குறைப்பதற்காக இடத்திற்கு ஏற்றவாறு மெட்ரோ இரயில் நிலையங்களின் அமைப்பு மாற்றப்படும். * தனியார் இடங்களில் தன்னிடைவுப் பகுதிகளே (Setback area) திட்டத்திற்காக கையக்ப்படுத்தப்படும் இருப்பினும் இவைகளை தாண்டி சில தனியார் இடங்கள் இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. * அதன்படி இத்திட்டத்திற்கு தேவைப்படும் தனியார் நிலங்களை நில உரிமைதாரர்களுடன் கலந்து பேசி, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, ஒளிவு மறைவின்றி அவர்களின் ஒப்புதலோடு வாங்குவதற்கு பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்படும், * பேச்சுவார்த்தை மூலம் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு நில உரிமைதாரர்களின் ஒப்புதலோடு நிலம் வாங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். * தனியார் நிலத்திற்கு, தற்பொழுது உள்ள நடைமுறை/சந்தை விலையை கருத்தில் கொண்டு ஒத்துக் கொள்ளத்தக்க வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும். * தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு தற்பொழுது கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்படும் நடைமுறை விலையின் அடிப்படையில், மதிப்பிறக்கத்திற்காக (depreciation) விலையை குறைத்துக் கொள்ளாமல் இழப்பீடு வழங்கப்படும். * சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துடன் கலந்து பேசி, இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் நில உரிமைதாரர்களுக்கு வளர்ச்சி உரிமை மாற்றம் சான்றிதழ்(TDR Certificate) வழங்குகிறது * இந்த முறையில், பாதிக்கப்படும் நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்குப் பதிலாக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான தரைப்பரப்பு குறியீட்டின்படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் வளர்ச்சி உரிமை மாற்றம் சான்றிதழ் வழங்கப்படும். * வளர்ச்சி உரிமை மாற்றச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள நில அளவிற்கு, புதிய இடத்தில் தரைப்பரப்பு குறியீட்டு அளவுக்குமேல் சில விதிகளுக்கு உட்பட்டு கட்டிக் கொள்ளலாம். * ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் கூடுதல் இடங்களை சேர்த்துத் கொள்ளலாம். * வளர்ச்சி உரிமை மாற்றச் சான்றிதழை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடமோ அல்லது நில மேம்படுத்து வோர்களிடமும் விற்கலாம். * புறநகர பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக இந்த வளர்ச்சி உரிமை மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தும் பட்சத்தில், வளர்ச்சி உரிமை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள அளவிற்கு, புறநகர் பகுதிக்கான நில வழிகாட்டி மதிப்புப்படி கட்டிட நில அளவு கூடும்.


3.எந்த சட்டத்தினை பயன்படுத்தி நிலம் கையகப்படுத்தப்படும்?
17 (2) நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894.


4.மெட்ரோ இரயில் திட்டத்திற்கு எந்தெந்த மத்திய அரசு துறைகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படும்?
தெற்கு இரயில்வே, இராணுவம், பி.எஸ்.என்.எல், தபால் துறை, ஆயுள் காப்பீட்டுக் கழகம். இந்திய விமான நிலைய ஆணையம், கேந்திரிய வித்யாலயா மற்றும் சிப்பெட்.


5.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கை என்ன?
தமிழ் நாடு அரசின் கொள்கையின்படி ஒரு எளிதான, அனைத்தும் உள்ளடக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு, கையகப்படுத்தப்படும் நிலம் / சொத்து உரிமையாளர் மற்றும் இதர குடியிருப்போர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கப்படவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நில உரிமைதாரர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும், குடியிருப்புப்பகுதிகள் மற்றும் வணிகப்பகுதிகள் என்று தனி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கையை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.


6.இத்திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுமா?
இல்லை. இத்திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு சிறப்பான இழப்பீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில், மற்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை விட மெட்ரோ இரயில் திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு அதிக அளவில் இழப்பீடு வழங்கப்படுகிறது.


7.குடியிருப்பு / வர்த்தகத்திற்காக வாடகை கொடுத்து இருக்கும் வாடகை தாரர்களுக்கு என்று தனியாக இழப்பீடு வழங்கப்படுமா?
வாடகைதாரர்களுக்கு ஆறு மாத வாடகை செலவுத் தொகையாக வழங்கப்படும். இடம் மாற்றிச் செல்வதற்காக ரூ 20,000/- மும் கூடுதல் கட்டிடங்கள் வாடகைதாரரால் ஏற்படுத்தப்பட்டிருப்பின், அதற்குரிய தொகை வழங்கப்படும். கட்டிட உரிமையாளருக்கு முன்பணம் பாதுகாப்புத்தொகை வழங்கியிருந்தால், அதனை வாடகைதாரருக்கு வழங்கிட, கட்டிட உரிமையாளருக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து பிடித்தம் செய்து வழங்கப்படும்.


8.இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படும்?
∗ தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும். ∗ அழிக்கப்படாமல் உள்ள பொருட்களை பெற்றுக் கொள்ளும் உரிமை ∗ முழுக்கட்டிடத்தையும் இழந்தவருக்கு, பிழைப்பூதியமாக குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி 12 மாத கால ஊதியம் வழங்கப்படும். ∗ இத்திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு விருப்படுவோருக்கு அவர் தனது திறமையை வளர்த்துக் கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.


9.மெட்ரோ இரயில் திட்டத்தினால் எவ்வளவு குடிசைவாழ் மக்கள் பாதிக்கப்படுவர்?
சென்னை சைதாப்பேட்டையில் அடையாற்றுப் பகுதியில் குடிசையில் வசிக்கும் சுமார் 275 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


10.மெட்ரோ இரயில் திட்டத்தினால் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்படும்? பாதிக்கப்படுவோருக்கு எவ்வாறு நிவாரணம் அளிக்கப்படும்?
சுமார் 228 தனியார் உடமைகளும் மற்றும் 519 குடிசைவாசிகளும் சென்னை மெட்ரோ இரயில் திட்டதினால் பாதிக்கபட்டுள்ளனர் . பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று இடமும். வாய்ப்பு இருப்பின் வருமானம் ஈட்டக்கூடிய திட்டத்தினால் பயனும், அழிக்கப்படாத பொருட்களை எடுத்துச் செல்லும் உரிமையும்,முழுக்கட்டிடத்தையும் இழந்தவர்களுக்கு வீடு மாறிச் செல்வதற்காக ரூ 20,000/- தொகையும், பிழைப்பூதியமாக 12 மாத ஊதியமாக (ரூ 30,000/-) வழங்கப்படும். தனியார் சொத்துகளுக்கு, நிலஎடுப்புச்சட்ட விதிகளின்படி உரிய நட்ட ஈட்டுத்தொகை வழங்கப்படுகிறது.


11.திட்டத்தினால் பாதிக்கப்பட்டோரின் குறைகள் எவ்வாறு தீர்க்கப்படும்?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (திட்டம் மற்றும் நிதி) அவர்கள் தலைமையில் குறை தீர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலரும் உயர்நிலை திட்ட அமைப்பாளரும் உறுப்பினர்களாக உள்ளனர். திட்டத்தினால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் மற்றும் குடியமர்த்துதல் தொடர்பான குறைகளை இக்குழு ஆய்வு செய்து நிவர்த்தி செய்யும்.

1.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினால் கட்டுமானக் காலங்களிலும், மெட்ரோ இரயில் இயக்கப்படும் போதும் சுற்றுச் சூழல் பாதிப்பு எப்படி இருக்கும்?
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுத்தாலும் கட்டுமானக் காலங்களில் சுற்றுச் சூழல் கீழ்க்கண்ட வாறு பாதிக்கப்படும். சாலைகள் குறுகலாக்கப்படும். இதனால் வாகன நெரிசல் ஏற்படும். சாலைகளில் மண் கொட்டுவது தவிர்க்கப்பட்டாலும், தூசி பரக்காமல் இருப்பதற்காக அடிக்கடி அதன்மேல் தண்ணீர் தெளிக்கப்படும். பணிநடைபெறும் இடங்களில் உலகத்தரம் வாய்ந்த தடுப்புகள் போடப்படும். இருப்புப்பாதைகளின் பாகங்கள் தனியாக வார்ப்புக் கூடங்களில் கட்டப்பட்டு வழித்தடம் அமையவுள்ள இடங்களுக்கு எடுத்துச்சென்று பொருத்தப்படும். எனவே ஒலி மாசு அதிக அளவில் இருக்காது. மெட்ரோ இரயில் இயக்கப்படும்போது, ஒரு தொடர் வண்டி இயக்குவதால் சாலையில் பயன்படுத்தப்படும் 16 பேருந்துகள் அல்லது 300 கார்கள் அல்லது 600 இரு சக்கர வாகனங்கள் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் மாசு கெடாமல் இருப்பதோடு எரிசக்தியும் சேமிக்கப்படுவதால், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் ஒரு பசுமைத்திட்டமாக இருக்கும். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள, உலக அளவில் நிகழும் தட்பவெட்ப நிலை மாறுதல்களை கண்காணிக்கும் கியோட்டோ மரபு பிரிவு, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு “கரிய உதவி” வழங்க உள்ளது. “கரிய உதவி” வருவாயை சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு விற்கலாம்.


2.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு எத்தனை மரங்கள் வெட்டப்படும்? புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
வழித்தடங்களில் உள்ள சுமார் 385 மரங்கள் வெட்டப்படவுள்ளன. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் அதனை ஈடுசெய்யும் விதத்தில் பத்து மரக்கன்றுகள் நடப்படும். இப்பணிகள் தமிழக அரசின் வனத்துறையின் ஆலோசனை மற்றும் உதவியோடு நிறைவேற்றப்படும்.


3.இத்திட்டத்தினை செயல்படுத்தும்போது ஒலி மாசும் அதிர்வும் ஏற்படுமா?
இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகமும், இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்படி பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


4.சென்னை மெட்ரோ இரயில் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமா? இது ஒரு பசுமைத் திட்டமா?
ஆம். இது ஒரு பசுமைத் திட்டமாகும். சுற்றுச்சூழல் மாசு கெடாமல் இருப்பதோடு எரிசக்தியும் சேமிக்கப்படும். சாலை போக்குவரத்துத் திட்டங்களுக்குத் தேவைப்படும் எரிசக்தியில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு தேவை. இத்திட்டத்தில் கரியம் வெளியேற்றம் மிக மிக குறைவு.


5.சுரங்கம் தோண்டுகின்றபோது வெளியேற்றப்படும் மண் எங்கு கொட்டப்படும்?
தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரையினைப் பெற்று அதன்படி கையாளப்படும்.



1.உயர்த்தப்பட்ட வழித்தடம் கட்டுகின்ற பொழுது கட்டுமான பகுதிகளில் எவ்வளவு இடம் தேவைப்படும்? வாகனப் போக்குவரத்திற்கு எவ்வளவு இடம் மீதம் இருக்கும்?
உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் கட்டுகின்ற பகுதிகளில், சாலையின் நடுவிலிருந்து இரண்டு பக்கங்களிலும் தலா ஐந்து மீட்டர் இடைவெளி தேவைப்படும். கட்டி முடித்த பிறகு சாலையின் நடுவில் இரண்டு மீட்டர் இடம் மட்டுமே தூண்கள் அமைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். பெருவாரியான பகுதிகளில் இரண்டு வழி சாலைப் போக்குவரத்திற்கு இடம் இருக்கும்.


2.தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டுகின்றபொழுது தரைக்குமேல் செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பாதிப்பு ஏற்படாது. தரைக்குமேல் உள்ள கட்டிடங்களுக்கோ சாலையில் செல்லும் வாகனங்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது.


3.தரைக்கு அடியில் மெட்ரோ இரயில் நிலையம் கட்டுகின்ற பகுதியில் வாகனப் போக்குவரத்து எவ்வாறு மாற்றிவிடப்படும்?
தரைக்கு அடியில் மெட்ரோ இரயில் நிலையம் கட்டுகின்றபொழுது சாலையில் வாகனப் போக்குவரத்து கீழ்க்கண்டவாறு நெறிமுறைப்படுத்தப்படும். சுரங்க மெட்ரோ இரயில் நிலையம் கட்டும் இடம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும். பிரிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் மட்டும் குழிதோண்டப்படும். குழி தோண்டப்படாத பகுதியில் வாகனம் செல்ல அனுமதிக்கப்படும். ஒரு பகுதி தோண்டிய பிறகு அப்பகுதி மூடப்படும். வாகனங்கள் மூடப்பட்ட பகுதிமேல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு, அடுத்தப்பகுதி தோண்டப்படும். எந்த ஒரு நேரத்திலும், ஒரு பகுதியில் வாகனம் செல்வதற்கு வழிவகை செய்யப்படும். மேலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக, கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில், உலகத்தரம் வாய்ந்த தடுப்பு அரண் அமைக்கப்படும். போக்குவரத்துக் காவல்துறையும் சாரணியர்களும் உதவுவார்கள். மெட்ரோ இரயில் பணிகள் சென்னையின் பிரதான சாலைகளில் நடைபெறுவதால், பிற சாலைகளில் திருப்பி விடப்படும் வாகனப் போக்குவரத்திற்காக மற்ற சாலைகள் முடிந்தவரை அகலப்படுத்தப்படும்.


4.மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனப் போக்குவரத்து எவ்வளவு காலம் மாற்றி விடப்படும்?
தரைக்கு அடியில் சுரங்க இரயில் நிலையங்கள் கட்டப்படும் இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். உயர்த்தப்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டப்படும் இடங்களில் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாகனப்போக்குவரத்து பாதிக்கப்படும். மற்ற கட்டுமான இடங்களில் சுமார் ஆறு மாத காலங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும்.


5.வாகனப்போக்குவரத்தை நெறிமுறைப்படுத்துவதற்கு ஏதாவது அமைப்பு / குழு அமைக்கப்பட்டுள்ளதா?
மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டுமானக் காலங்களில் ஏற்படும் வாகனப்போக்குவரத்து பாதிப்புகளைக் களையவும், போக்குவரத்தை நெறிமுறைப் படுத்துவதற்காகவும், தமிழ் நாடு அரசு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேளாண் இயக்குநரின் தலைமையில் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.


6.வாகனப்போக்குவரத்து பாதிப்புகளை குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது?
தவிர்க்கமுடியாமல் இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகனப்போக்குவரத்தை நெறிமுறைப்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு அரசு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளரும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேளாண் இயக்குநர் தலைமையில் போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இக்குழு பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்தும். கட்டுமானக் காலங்களில், முடிந்த அளவு பெருவாரியான இடங்களில் சாலையில் இருபக்கங்களிலும் இரண்டு வழிகள் ஏற்படுத்தப்படும். உயர்த்தப்பட்ட வழித்தடங்களில்: உயர்த்தப்பட்ட இருப்புப்பாதைகள் அமைக்கப்படும்பொழுது சாலையின் நடுவில் தூண்கள் கட்டப்பட்டு அதன்மேல் இரயில் இருப்புப் பாதை அமைக்கப்படும். எனவே, சாலையின் மையப்பகுதியிலிருந்து இரண்டு பக்கமும் தலா ஐந்து மீட்டர் அகலத்திற்கு தடுப்பு அரண் போடப்பட்டு, பணிகள் நடைபெறும். சாலையின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் 8 முதல் 12 மாத காலம் வரை இவ்வகை வாகன போக்குவரத்துக் கட்டுப்பாடு இருக்கும். சுரங்கப்பாதையில்: சுரங்கப்பாதையை பொருத்தவரை சுரங்கம் தோண்டும் பொழுது வாகனப்போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏதும் இருக்காது. சுரங்கம் தோண்டுவதற்கு நவீன துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்படும். கொல்கட்டாவில் 1970 ஆம் ஆண்டுகளில் மெட்ரோ இரயில் பாதைகள் அமைப்பதற்கு நீளமான குழிகள் வெட்டப்பட்டு பாதை அமைத்தபின் மூடப்பட்டது. ஆனால் தற்பொழுது சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டுகின்றபொழுது தரைப்பகுதியில் வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு இருக்காது. ஆனால் தரைக்கு அடியில் இரயில் நிலையம் கட்டுகிறபோது, அப்பகுதியில் குழி தோண்டப்பட்டு, இரயில் நிலையம் கட்டியபிறகு, நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கு வாயில் வைத்தபின் மற்ற பகுதிகள் மூடப்படும். சுரங்க மெட்ரோ இரயில் நிலையம் கட்டும் இடம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும். பிரிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் மட்டும் குழிதோண்டப்படும். குழி தோண்டப்படாத பகுதியில் வாகனம் செல்ல அனுமதிக்கப்படும். ஒரு பகுதி தோண்டிய பிறகு அப்பகுதி மூடப்படும். வாகனங்கள் மூடப்பட்ட பகுதிமேல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு, அடுத்த பகுதி தோண்டப்படும். எந்த ஒரு நேரத்திலும், ஒரு பகுதியில் வாகனம் செல்வதற்கு வழிவகை செய்யப்படும். மேலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக, கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில், உலகத்தரம் வாய்ந்த தடுப்பு அரண் அமைக்கப்படும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக, பணி நடைபெறும் இடங்களில் உலகத்தரம் வாய்ந்த தடுப்பு அரண் அமைக்கப்படும். மெட்ரோ இரயில் பணிகள் சென்னையின் பிரதான சாலைகளில் நடைபெறுவதால், பிற சாலைகளில் திருப்பி விடப்படும் வாகனப் போக்குவரத்திற்காக மற்ற சாலைகள் முடிந்தவரை அகலப்படுத்தப்படும். கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கு முன்பாக தரையில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கம்பிகள், தொலைபேசி கம்பிகள், தண்ணீர் குழாய்கள், சாக்கடை குழாய்கள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவை வேறுவழியில் திருப்பிவிடப்படும். இதனால் இதன் சேவைகள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வகை பயன்பாட்டு அமைப்புகளை இடமாற்றம் செய்யும் பணி முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து காவல் துறையினருடன் கலந்து போக்குவரத்து நெரிசலை குறைத்து, போக்குவரத்தை சீராக செல்லும் வகையில் மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கென்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை போக்குவரத்து ஒருங்கினைப்பாளராக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தேசிய சாரணியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளப்படும். Øகோரிக்கை: நீண்டகாலப் பயன்களைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்புத் தருமாரு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 044-23792000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். chennaimetrorail@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் கருத்துக்களை அனுப்பலாம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்: மெட்ரோ இரயில் திட்டப்பணிகளால் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் நடைபெறும் வழியாக செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சற்று முன்பாக கிளம்புமாறு பொதுமக்கள் கேட்டுப் கொள்ளப்படுகிறார்கள்.


1.மெட்ரோ இரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்படும்?
மெட்ரோ இரயில்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்திற்கு செல்லக் கூடிய திறன் இருந்தாலும், மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு மெட்ரோ இரயில் நிலையத்திலும், இரயில் 30 வினாடிகள் நின்று செல்லும்.


2.எவ்வளவு நேர இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்?
காலையிலும், மாலையிலும் முக்கிய நேரங்களில், 4.5 நிமிடங்களுக்கு ஒரு இரயில் (நான்கு வண்டிகள் கொண்ட தொடர்) என்ற விகிதத்தில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் இத்திட்டத்தின் தொடக்க காலங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு இரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு மெட்ரோ இரயில் நிலையத்திலும், இரயில் 30 வினாடிகள் நிற்கும்.


3.இறுதி இரயில் நிலையங்களான வண்ணாரப்பேட்டை யிலிருந்து விமான நிலையம் சென்றடைய மெட்ரோ இரயிலில் எவ்வளவு நேரம் ஆகும்?
வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ இரயிலில் சுமார் 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஆகும்.


4.இரவு நேரங்களில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுமா?
மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் பொழுது பொது மக்களின் வரவேற்பை பொறுத்து இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.


5.மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவுபெறாத நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பகுதிகளில் இரயில் இயக்கப்படுமா?
மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் 2014-2015 ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தொடர்வண்டிகள், பராமரிப்பு கூடம் மற்றும் முக்கிய சேவைகள் தயாராக இருந்தால், இரயில் பாதை கட்டி முடிக்கப்பட்ட பகுதிகளில் இரயில் சேவைகளைத் தொடங்க இயலும்.


6.சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு எந்த வகையிலான மின்சார டிராக்ஷன் பயன்படுத்தப்படும்?
புறநகர் இரயில் போக்குவரத்திலும் துரித இரயில் போக்குவரத்திலும் பயன்படுத்தப்படுவது போல் 25 கே.வி.ஏ. மின்சார டிராக்ஷன் பயன்படுத்தப்படும்.


7.சென்னை மெட்ரோ இரயில் சேவைக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?
மெட்ரோ இரயில்களை இயக்குவதற்கும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் (நிலையங்களில் உள்ள ஒளிவிளக்குகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதைளில் காற்றோட்டவசதி, அறிவிப்பு சைகை, தொலைத் தொடர்பு, தீயணைப்பு போன்றவைகளுக்குத் தேவைப்படும் மின்சாரம்), பணிமனை, கிடங்கு மற்றும் பராமரிப்புப்பகுதிகள் ஆகியவற்றிற்கு மின்சாரம் தேவைப்படும். இரயிலை இயக்குவதற்கும், சுரங்க இரயில் நிலையங்களுக்கும் தான் அதிக அளவு மின்சாரம் தேவைப்படும். சாலைப்போக்குவரத்தோடு ஓப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் மட்டுமே மெட்ரோ இரயில் சேவைக்குத் தேவைப்படும். மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல்கட்ட இரயில் போக்குவரத்திற்கு, நாள் ஒன்றுக்கு 70 மெகா வாட்மின்சாரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மின்சாரத் தேவை 10 விழுக்காடு உயருகின்ற விகிதத்தோடு ஒப்பிடுகையில் மெட்ரோ இரயிலின் தேவை ஒரு விழுக்காடு மட்டுமே. எனவே மெட்ரோ இரயில் சேவைக்குத் தேவைப்படும் மின்சாரம் குறைவுதான்.