சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் விவரம்

கட்டம் I

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.046 கிமீ வலைப்பின்னலை உள்ளடக்கிய,இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. அதாவது, வழித்தடம் 1 ஆனது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் (23.085 கி. மீ) வழித்தடம் 2 ஆனது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் (21.961 km) இணைக்கப்பட்டுள்ளது . இந்த முதல் கட்டத்தில் உள்ள 32 நிலையங்களில், 19 சுரங்க நிலையங்களாகவும் (சுமார் 55%), மீதமுள்ள 13 உயர்த்தப்பட்ட நிலையங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்கள் இடையே மாறி பயணம் செய்யும் வசதி ஆலந்தூர்(உயர்த்தப்பட்ட) மற்றும் சென்னை சென்ட்ரல் (சுரங்கம்) நிலையங்களில் உள்ளது.

வணிக செயல்பாடு

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நிலை 1 ஆனது பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான நிலையங்கள் 29 ஜூன் 2015 அன்று திறக்கப்பட்டது. சின்னமலை முதல் விமான நிலை வரை உள்ள நிலையங்களானது 21 செப்டம்பர் 2016 அன்றும்,பரங்கிமலை நிலையமானது 14 அக்டோபர் 2016 அன்றும் திறக்கப்பட்டது. திருமங்கலம் மெட்ரோ நிலையத்திலிருந்து நேரு பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான முதல் சுரங்க பாதை 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது. எழும்பூர் மெட்ரோ நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரையிலான சுரங்கப் பகுதிகள் ஓராண்டுக்குப் பிறகு 2018 மே 25 அன்று திறக்கப்பட்டது. மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ஆயிரம் விளக்கு முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தின் சுரங்க பாதை 2019 பிப்ரவரி 10 அன்று திறக்கப்பட்டது. சார் தியாகராய கல்லூரி மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான நிலையங்கள் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

கட்டம் I – விரிவாக்கம்

முதற்கட்ட விரிவாக்கமானது, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 9.05 கி. மீ தொலைவை உள்ளடக்கியது. இதில்,7 உயர்த்தப்பட்ட நிலையங்களும், 2 சுரங்க நிலையங்களும் மற்றும் ஒரு உயர்த்தப்பட்ட பணிமனையும் உள்ளது.திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை நிலையம் தவிர, இதர நிலையங்களை உள்ளடக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான வழித்தடம் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

கட்டம் II

இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 நிலையங்களுடன் 118.9 கி. மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது (i.e) வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ) , வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ) , வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ). இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு (கட்டுமானத்தின்போது வட்டி செலவினம் உட்பட) ரூபாய் 63246 கோடி (அறுபத்து மூன்றாயிரத்து இருநூற்று நாற்பத்தாறு கோடி ரூபாய் மட்டுமே) ஆகும். இந்த முன்மொழிவு இந்திய அரசின் செயல்முறை மற்றும் ஒப்புதலின் கீழ் உள்ளது.இத்திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண் பரிசோதனை முழுமையாக முடிக்கப்பட்டு விரிவான வடிவமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மாநில அரசு வழங்கிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், வழித்தடம் 3-இல் நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதைப் பணிகளுக்கும், வழித்தடம் 4-இல் உயர்த்தப்பட்ட, சுரங்க வழிப்பாதை, பணிமனை மற்றும் இருப்புப்பாதை பணிகளுக்கும், மற்றும் வழித்தடம் 5-இல் உயர்த்தப்பட்ட பாதை கட்டுமானத்திற்கான ஓப்பந்தங்களும் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024